ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 4ம் தேதி தான் எம்எல்ஏவான திருமகன் இறந்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்க ஓரிரு மாதமாகும் என அரசியல் கட்சிகள் காத்திருக்க, திருமகன் ஈவேரா இறந்த அடுத்த 14 நாட்களிலேயே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. ஜனவரி 31-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஈரோடு கிழக்கு எங்கள் தொகுதி. நாங்கள் நின்று வென்ற தொகுதி. எங்களது தோழமைக் கட்சிகளான திமுக, மதிமுக, விசிக ஆகியோர் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்க இருக்கிறோம். ஏறக்குறைய இன்று மாலை அவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறோம்” எனக் கூறினார்.