நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுக சட்டமன்றத்தில் நுழைகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில், 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள மொத்த தொகுதிகளையும் கைப்பற்றியது. கரூரில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுக வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் முடிவுகளை தமிழகம் மிகவும் எதிர்பார்த்திருந்தது. அதில் ஒன்று, கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியின் தேர்தல் முடிவுகள்.
செந்தில் பாலாஜி, 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவில் பிரிவுகள் ஏற்பட்டு இ.பி.எஸ். பிரிவு, ஓ.பி.எஸ். பிரிவு, தினகரன் பிரிவு என செயல்பட்டது. அதில் செந்தில்பாலாஜி, தினகரன் பிரிவில் இருந்தார். அப்போது தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உட்பட அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தினகரன் அணியிலிருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்திருந்தார். அவருக்கு அந்த இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட திமுக வாய்ப்பு அளித்தது. அவரும் அத்தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த சமயத்தில், அவர் ஏன் தொகுதி மாறி போட்டியிடுகிறார் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் கேள்விகள் எழுந்தன. ஆனால் அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போதும், நக்கீரனுக்கு அளித்தப் பேட்டிகளிலும், “அரவக்குறிச்சியும் கரூர் மாவட்டத்தில்தான் உள்ளது; தற்போது போட்டியிடும் கரூர் தொகுதியும் கரூர் மாவட்டம்தான். இந்த இரண்டு தொகுதிகளும் எனது இரண்டு கண்கள் போன்றது” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக இடைத்தேர்தலின்போதே அவர் திமுக தலைமையிடம், இடைத்தேர்தல் என்றால் அரவக்குறிச்சி, பொதுத்தேர்தல் என்றால் கரூர் என கூறி சம்மதம் வாங்கியிருந்தார். அதேபோல் தற்போது பொதுத்தேர்தலில் கரூர் தொகுதியைப் பெற்று வெற்றியும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் நான்கு தொகுதிகளையும் வென்று திமுக தலைமையிடம் சமர்ப்பிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல் கரூர் மாவட்டம் முழுவதையும் வென்று திமுக தலைமையிடம் சமர்ப்பித்துள்ளார். இவரது பெயரும் அமைச்சரவை பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.