சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தலைமை அறிவித்திருந்தது. முதற்கட்டமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இரண்டு பதவிகளுக்கும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் விருப்ப மனுத் தாக்கல் செய்யாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் நடத்திய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டங்கள், ஒன்றியம், நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று சேலம் புறநகர் மாவட்டத்திற்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று. இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர் பதவியையும் விடாது இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.