
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் திமுக தலைமையிலான அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கவில்லை. இதனால்தான் இந்த வழக்கில் இப்படி தீர்ப்பு வந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் கொண்டலாம்பட்டி செய்தியாளர்களைச் சந்திக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர், ''எந்த அரசு வந்தாலும் ஒரே அதிகாரிதான். எங்களுக்கும் அதே அதிகாரிதான், அவர்களுக்கும் அதே அதிகாரிகள்தான். யாரும் மாறவில்லை. எனவே முறையாக மூத்த வழக்கறிஞர்கள் வைத்துதான் சட்டத்தைத் தயார் செய்து இடஒதுக்கீட்டை அறிவித்தோம். இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் முழுதரவுகளை தற்போதைய அரசு மதுரைக் கிளையில் தாக்கல் செய்யவில்லை. அதை வைத்துதான் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பார்கள். இவர்கள் கீழ் மட்டத்திலேயே தரவுகளைச் சரியாக கொடுக்கவில்லை. இதை நாம் சொல்லவில்லை நீதிபதிகளே சொல்லிவிட்டார்கள். சரியான தரவுகளை கொடுக்காததால்தான் இந்தநிலை ஏற்பட்டுவிட்டது'' என்றார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ''வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக ஈபிஎஸ் கூறிய கருத்து கண்டனத்திற்குரியது. வன்னியருக்கான உள்ஒதுக்கீட்டை நிலைநிறுத்த அனைத்து வாதங்களையும் திமுக அரசு நீதிமன்றத்தில் முன்வைத்தது. வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு கலந்து ஆலோசிக்கும். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் வரை போகுமளவுக்கு அலட்சியமாக செயல்பட்ட இபிஎஸ்-ஓபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். சமூகநீதி பற்றி இபிஎஸ், சி.வி.சண்முகம் போன்றவர்கள் முதல்வருக்கு பாடம் எடுக்க வேண்டாம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உரிய தரவுகளுடன் பரிந்துரையை பெறாமல் கோட்டைவிட்டது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.