
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் பணிக்குழு அமைக்கவும், வேலைகளை ஒருங்கிணைக்கவும் கடந்த 26 ஆம் தேதி அதிமுக எடப்பாடி பழனிசாமி ஈரோட்டிற்கு நேரில் வந்தார். அன்று ஈரோடு பகுதி அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து 27 ஆம் தேதி மாநில அளவிலான நிர்வாகிகளை ஈரோட்டுக்கு அழைத்து தேர்தல் ஆய்வுக் கூட்டமும் நடத்தினார். அதில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு வாக்காளர் பட்டியல் விவரங்களையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார்.
இக்கூட்டத்தை தொடங்கி வைத்த பின் எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு கிழக்கு தொகுதியில் அசோகபுரம், அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பெரியார் நகர், வீரப்பன் சத்திரம் என ஐந்து பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளுக்கும் பூத் வாரியாக கழக நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று அந்த பூத்தில் இடம்பெற்றுள்ள பொறுப்பாளர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திற்கும் வாக்காளர் பட்டியல், ஏற்கனவே அதிமுக பெற்ற வாக்குகள், வார்டு விபரம், பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர் விபரம் உள்ளிட்ட விபரங்கள் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிக்குச் சென்று ஒரு கூட்டத்தைக் கூட்டி, நமது பணியை ஆரம்பிக்க வேண்டும்.
இதில், நிர்வாகிகள் பெயர் விடுபட்டு இருந்தால் அவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாளை முதல் வீடு வீடாகச் சென்று அந்த வீட்டில் வாக்காளர் இருக்கிறாரா இறந்து போய்விட்டாரா என்பது குறித்த விபரம் எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறைய வாக்காளர்கள் வெளியூர் சென்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பலபேர் இல்லை என்ற செய்தி வந்திருக்கிறது. எனவே, பூத் குழு பொறுப்பாளர்கள் அந்த கணக்கை எடுக்க வேண்டும். விரைவாக நமது வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதோடு, இந்த பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நன்மைகள், இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை பட்டியலிட்டு நோட்டீஸ் வழங்கப்படும். அதை வீடு வீடாக வழங்க வேண்டும்.
எதிரிகள் தங்களது பணியை ஆரம்பித்து விட்டனர். நமது பூத் பொறுப்பாளர்கள், வாக்காளர்கள் அந்தந்த முகவரியில் உள்ளார்களா என்ற பணியை 3 நாட்களில் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் தங்குவதற்கு தேவையான இட வசதி செய்து தரப்படும். யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். திடகாத்திரமானவர்களை அழைத்து வாருங்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர்த்து தேர்தல் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யுங்கள்” எனக் கூறினார்.