மக்களவையில் இன்று அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை இடைக்கால பட்ஜெட் குறித்து பேசினார்.
அப்போது, விவசாயிகளுக்கு குறைந்தது 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பது போதாது. தற்போது அறிவித்த சலுகைகள் ஏன் 2018ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கைப்போல உள்ளது.
நூறுநாள் வேலைத் திட்டத்திலுள்ள குறைகளால் மக்கள் என்னை முற்றுகையிட்டு கேள்வி கேட்கின்றனர். நூறுநாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என என்னிடம் கிராம மக்கள் கூறுகின்றனர். நூறுநாள் வேலைத் திட்டத்தின் கொள்கையை மாற்றியது மிகப்பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் படுதோல்வி அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது. மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா ஆகிய திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை.
பங்களாதேஷிலிருந்து துணிகள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவில் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேட் இன் இந்தியா என கூறுகிறீர்கள். ஆனால் சீனப் பட்டாசுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு திட்டத்தின் பயன் என்ன? பண மதிப்பிழப்பால் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வசூலில் தங்களது பங்கை பெற மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும், பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. இதுவரை தரவில்லை. ஜெயலலிதா முதல் தற்போதைய அரசு வரை கோரிக்கை விடுத்தும் இதுவரை மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
தானே, வர்தா, ஒகி, கஜா என பல புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் பலமுறை அரசு மீது நம்பிக்கை அளித்து வாக்களித்தோம். ஆனால் அரசு எங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது என பேசினார்.
தம்பிதுரை பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தப்படியே இருந்தனர்.