பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியுள்ள நிலையில், பா.ஜ.க. தரப்பில் 30- க்கும் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான கிஷன் ரெட்டி, தேர்தல் இணை பொறுப்பாளரும், மத்திய இணையமைச்சருமான வி.கே.சிங், பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் சென்னையில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ்.-யை தனித்தனியே சந்தித்துப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷா உடனான பேச்சுவார்த்தையின் முடிவில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதிச் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.