
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “விஷச் சாராய மரணம் வேதனை அளிக்கிறது. இவ்வளவு அதிகமான நபர்கள் உயிரிழந்த செய்தி வேதனையை ஏற்படுத்துகிறது. கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவருமே மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள். கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற இடத்திற்கு அருகில் தான் காவல் நிலையம் இருக்கிறது. காவல் நிலையம் அருகிலேயே சாராயம் விற்பனை என்றால் ஆட்சி அதிகாரம் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம்.
ஆளுங்கட்சி மற்றும் அதிகார பலமிக்கவர்களின் ஆதரவுடன்தான் இந்தக் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது. மிகப்பெரிய கும்பல் இதற்குப் பின்னால் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. முதலில் வீர வசனம் பேசுகிறார்கள். சம்பவம் முடிந்த பிறகு அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஏற்கெனவே நடந்த சம்பவத்தையும் சிபிசிஐடி விசாரித்தது. அந்த வழக்கு என்னவானது?. கடந்த ஆண்டு நடந்த கள்ளச்சாராய மரண வழக்கில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டனர் என்பது கூட தெரியவில்லை. கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்திருந்தால் பலரைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், இந்த மரணத்தை வயிற்றுப்போக்கு, வயிற்று வலி என முன்னாள் ஆட்சியல் பச்சைப் பொய் கூறினார். இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.