தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியிடு என மும்முரமாக செயல்பட்டன.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதேபோல் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது மார்ச் 20 தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன் படி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாகவும் சுயேச்சைகளாகவும் மொத்தம் 7,255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 4,526 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டும், 2,727 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் மொத்தம் 486 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 405 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, 81 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதோர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று 22ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை 3 மணிக்குள் விருப்பம் இல்லாதோர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெறும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. வேட்பு மனுக்கள் நிராகரிப்பு, போட்டியிட விரும்பாதோர் திரும்ப பெற்றுதல் ஆகியவை நிறைவடைந்தப்பின் இன்று மாலை முழுமையான வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதேவேளையில் சுயேச்சைகளுக்கான தனி சின்னத்தையும் இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.