இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ''எங்கள் கட்சியிலும் மாற்றுக் கட்சியிலிருந்து நிறைய பேர் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவிலிருந்து எந்த ஒரு நிர்வாகி போனாலும் அது மிகப்பெரிய விவாதமாக ஆகிக்கொண்டிருக்கிறது. எந்த ஒரு சாதாரண தொண்டனும் இந்த கட்சியை விட்டுப் போகக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். ஜனநாயகத்தில் அதுவும் குறிப்பாக தேர்தலில் எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியம். எனவே ஒரு தொண்டன் கூட இந்த கட்சியை விட்டுப் போனால் நாங்கள் நிச்சயமாக அதைப்பற்றிப் பார்க்க வேண்டும். அப்படி போகக்கூடாது என்பது எங்களுடைய விருப்பம். அதற்கான எல்லா விஷயங்களையும் நாங்கள் கவனிப்போம். எந்த காரணத்தால் அவர்கள் போகிறார்கள், என்ன பிரச்சனை இருக்கிறது என்று ஆய்வு செய்வோம். ஆனால் சிலர் தனிப்பட்ட அரசியல் ஆசை காரணமாக, தனிப்பட்ட கொள்கைகளுக்காக செல்கின்ற போது எதுவும் செய்ய முடியாது. பாஜக மிகப்பெரிய கோட்டையாக இருக்க வேண்டும். அதில் உள்ளே வருபவர்கள் தான் இருக்க வேண்டும் வெளியே செல்லக்கூடாது என்பது எங்களுடைய கருத்து'' என்றார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் தவிர்த்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், “தமிழகம் கல்வியிலேயே முன்னேறிய மாநிலம். அதிலும் குறிப்பாக உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கின்ற மாநிலம் என்று சொல்கிறோம். உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்றால் பன்னிரண்டாம் வகுப்பை தாண்டி செல்ல வேண்டும். தேர்வு எழுதி தோல்வியடைந்து அல்லது தேர்வு எழுதிவிட்டு வேறு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதற்காக கல்லூரி செல்லாமல் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்றால் அரசாங்கம் இதை ரொம்ப தீவிரமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்தினுடைய கல்வி என்பது ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் கூட இன்றைக்கு அரசுப் பள்ளியில் சேரக்கூடிய மாணவர்கள் விகிதம் குறைந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் நல்ல மைதானம் இருக்கிறது. ஆசிரியர்கள் இருக்கிறார்கள், ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் இருக்கிறது. இலவசமாக லேப்டாப், புது சைக்கிள், யூனிஃபார்ம், புத்தகம், உணவு எல்லாம் இருக்கிறது. இதையும் தாண்டி ஏன் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர மறுக்கிறார்கள். இது கவலை அளிக்கக் கூடிய விஷயம். அதனால் கல்வித்துறை அமைச்சர் அவருடைய நண்பர் சினிமாவில் நடிக்கலாம் அமைச்சராக இருக்கலாம் அவர்களோடு சேர்ந்து நீங்கள் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. பிரண்ட்ஷிப்புக்கு எதையும் சொல்லவில்லை. கல்வித்துறை அமைச்சர் இதையும் கவனிக்க வேண்டும்.” என்றார்.