ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டதை நிராகரிக்க வேண்டும் என அதிமுக எடப்பாடி தரப்பு புகாரளித்தது. கட்சியின் அங்கீகாரம் இல்லாத வேட்பாளர்கள் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது சட்ட விரோதம். எனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
வேட்புமனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாள். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்தனர். இது குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, “அதிமுக இதற்கு முன் கர்நாடகத்தில் வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதி, கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருந்தார். அவர் அறிவிப்புக்கு ஏற்றவாறு காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவரும், தங்கவயல் தொகுதியில் அனந்த்ராஜும் புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.
தொழில்நுட்பப் பிரச்சனையால் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த தேர்தலை பொறுத்தவரை இந்த நேரத்தில் நிற்பது வேண்டாம் என்று ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்றவாறு மனுக்களை வாபஸ் பெறுகிறோம். தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் நாங்கள் இரட்டை இலைக்கும் கட்சிக்கும் சொந்தக்காரர்கள் என்பதை கர்நாடக மண்ணில் இருந்து நிரூபித்துவிட்டோம். அதுதான் எங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி. எதிலும் பின்வாங்கவில்லை. எங்களது பணி துவங்கும்” எனக் கூறியுள்ளார்.