வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் உள்ள காதர்பேட்டை பள்ளிவாசலில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து ஏப்ரல் 12-ம் தேதி மதியம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து திமுக நாடாளுமன்ற வேட்பாளரும் அவரது மகனுமான கதிர் ஆனந்துக்கு பள்ளிவாசல் வளாகத்தில் மதியம் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம், என் மகன் கதிர் ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பள்ளிவாசலில் இருந்து வெளியேவந்த வயது முதிர்ந்த ஒரு இஸ்லாமியர், துரைமுருகனின் கையைப் பிடித்து, "எதற்காக இங்கு வந்து நீங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறீர்கள், இது அனைத்துமே உங்கள் வாக்கு, சிறுபான்மை வாக்கு உதயசூரியனுக்குதான் விழும். அதனால் நீங்கள் பயப்படாமல் கிராம பகுதிக்கும், மற்ற பகுதிக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுங்கள்.." என்று அவர் சொன்னவுடன் நெகிழ்ந்து போனார் துரைமுருகன். அப்போது அங்கு குழுமியிருந்த இஸ்லாமியர்கள் பலர் கைதட்டி ஆராவரம் எழுப்பினர். அங்கிருந்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டார் துரைமுருகன்.