Skip to main content

35 அமைச்சர்களுக்குப் பதில்  12 பேர் போதுமே! கி.வீரமணி 

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
K. Veeramani



கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் முக்கிய கடமையாகும்; அமைச்சர்களின் எண்ணிக்கை, துறைகளின் எண்ணிக்கையை குறைத்திடுக; தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிப்பதில் முக்கிய கவனம் தேவை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.  
 

அறிக்கை வருமாறு:
 

பொருளாதார வறட்சி என்ற பேரபாயம்!
 

கரோனாவின் பாதிப்பு மக்களுக்குத் தொற்று, நோய்க் கொடுமை, பலியாவது போன்ற கொடுமைகள் ஒருபுறம்; ஆனால், அதன் தவிர்க்க இயலாத விளைவுகள், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்பட பல்துறைகளையும் அதல பாதாளத்தில் பொருளாதார வறட்சி என்ற (Depression) நிலைக்குத் தள்ளும் பேர பாயம் மறுபுறம் உள்ளது.
 

மத்திய - மாநில அரசுகள் இதனை எப்படி எதிர்கொண்டு நிதி நிலைமையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், சுகாதாரத்தையும் சீரடையச் செய்யப் போகின்றன என்பது நாட்டோர் முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்!
 

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் எப்படி யார், யாருக்குப் பயனளிக்கும் என்று நிபுணர்களும், தலைவர்களும், அரசியல் பொருளியல் அரங்கில் உள்ள மேதைகளும் ஆராய்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
 

அறிவித்துள்ள தொகைகள் எங்கிருந்து, எப்படிப்பட்ட நிதி ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் (Financial Sources) என்பது விளக்கப்படவில்லையே என்பது ஒரு விவேகமுள்ள கேள்வியாகும்!
 

தமிழக அரசின் கவனத்திற்கு....
 

மத்திய - மாநில அரசுகளின் வருமான நிதி வரவுகள் சுருங்கிவிடும் நிலையில், அதிலும் மாநில அரசின் நிலையோ பெரும் வருவாய் இழப்பை சமாளிக்கக் கூடிய மிக மிக இக்கட்டான நிலையில் உள்ளதால், ஏற்கெனவே பெரிய பதவிகளை வகித்து, பல இக்கட்டான நெருக்கடிகளில் முந்தைய அரசுகளுக்கு உதவிய ஓய்வு பெற்ற நிர்வாகப் பெருமக்களின் கருத்துகளை கேட்டுத் திரட்டியுள்ளவற்றை நாம் தமிழக அரசின் கவனத்துக்கும், செயலாக்கத் திற்கும், பரிசீலனைக்கும் வைக்க விரும்பு கிறோம்.
 

நிதி ஆதாரங்களைப் பற்றி ஆராய்ந்து, பரிந்துரைகளைத் தர மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட ஒரு குழுவைத் தமிழக அரசு போட்டு, அவர்கள் தங்களது பணியையும் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு ஆராய்ந்து செயல்பட இந்தக் கருத்துரைகள் பெரிதும் பயன்படக்கூடும்.
 

மத்திய அரசுடன் போராடியாவது  விலக்குப் பெற முயற்சிக்கவேண்டும்
 

‘ஹெல்த் கேர்’ என்ற மக்கள் நல்வாழ்வுப் பிரிவை மேலும் விரிவாக்கிட - அதன் அடிக்கட்டுமானமாகிய மருத்துவர்கள் எண்ணிக்கை, செவிலியர்கள், லேப்டெக்னீஷியன்கள் உள்ளிட்டோரை அதிகப்படுத்தி, வசதிகளைப் பெருக்கி பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு நிதிப் பெருக்கத்தை அளிக்க நாம் ஆவன செய்ய வேண்டும்.


செவிலியர்கள் கல்லூரி, மருத்துவக் கல்லூரி இடங்களில், நீட் தேர்வு போன்ற முறைகளைத் தவிர்த்து, நுழைவுத் தேர்வுகள், மாணவர் சேர்ப்பு ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு விடு வதன்மூலம் - கரோனா போன்ற தொற்றுகள் - பொது நோய்கள் தடுப்புக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் அடிக்கட்டுமானம் வலுப்பெறவும் செய்ய முடியும். மத்திய அரசுடன் போராடியாவது விலக்குப் பெற முயற்சிக்கவேண்டும்.
 

மருத்துவப் பல்கலைக் கழகங்கள், மற்ற பல்கலைக் கழகங்களில், மருந்தியல் துறைகளில் ஆராய்ச்சி பெருக, ஊக்கப்படுத்த - பல்வேறு தகுதியுள்ள பல்கலைக் கழகங்களுக்கு உதவி, செயல் ஊக்கம் தர, முடிவை எதிர்நோக்கிய (Result Oriented) திட்டம் தீட்டவேண்டும்.
 

கரோனா ஊரடங்கால் தொழிற்கூடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மாற்றும் வகையிலும், போதிய உதவிகளை அதன் தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகையிலும் மாநில அரசு தரவேண்டும்.
 

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குப் பதில், இங்குள்ள வேலை வாய்ப்பைத் தேடி அலையும் இளைஞர்களை, அனைத்து வேலைகளுக்கும் பயிற்சி அளித்து ஒரு தெளிவான Labour force  உருவாக்கிடத் திட்டமிட்டு, உடனடியாக உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அப்பணிகளைத் தொடங்கவேண்டும்.
 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடத் திட்டமிடுதல் அவசர அவசியம்!
 

அரசுப் பணிகள் - கட்டுமானப் பணிகள் - சாலைகள் செப்பனிடுதல் - சீரமைத்தல் போன்ற பணிகளில் தொடங்கி, கணினி தொழில்நுட்பப் பணிகளுக்குப் பயிற்சி அளித்து பல துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடத் திட்டமிடுதல் அவசர அவசியமாகும்!
 

வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் எந்தத் தொழில்நிறுவனமும் அவர்களது தங்கும் வசதி உள்பட பலவற்றை கண்காணிக்கும் வகையில் சட்டத் திருத்தம்தான் தேவை.

 

nakkheeran app

 

35 அமைச்சர்களுக்குப் பதில்  12 பேர் போதுமே!
 

எல்லாவற்றையும்விட முக்கியம் ‘சிக்கனக் கோடரி’ என்ற ஒரு சொற்றொடர் முக்கியம்  (Austerity measures)
 

1. முதலில் அது அமைச்சரவையிலிருந்து தொடங்கவேண்டும். 35 அமைச்சர்களுக்குப் பதில் 12 பேர் போதுமே!
 

இதனால் பல வகையில் நிதிச் செலவு பலவும்கூட (பி.ஏ.,க்கள், காவலர்கள், வீடுகள்) குறையும் வாய்ப்பு ஏற்படும்.
 

அரசு அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பயணங்களை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் தேவை. மேல் வகுப்புகள் தருவதைக் குறைக்கலாம்.
 

தேவையற்ற பல கமிஷன்கள் போட்டு, வேலை செய்யாமலே பல மாதங்களுக்கான சம்பளம் பெறுவது போன்று, மக்களின் வரிப் பணம் வீணாகும் நிலை இப்போது!
 

பலப்பல கமிஷன்கள் -  புதிய நியமனங்கள் தேவையில்லை!
 

உதாரணத்திற்கு ஜெயலலிதா அவர்களது மரணம்பற்றி ஆராயும் கமிஷனால் என்ன பயன்? இப்போது அது செயல்படாத நிலையில், அதனை முடித்து வைக்கலாம். (Wind up all the Unnecessary Commissions) அதுபோல, பலப்பல கமிஷன்கள் உள்ளன. இனி புதிய நியமனங்கள் தேவையில்லை.
 

அரசு இலாக்காகளைக் குறைப்பதுபற்றியும் ஒரு சீர்மை ஏற்படுத்த, ஒரு சிறு குழு அமைத்து உடனடியாக அதன் பரிந்துரை களுடன்,  தேவையற்று பெருகிய துறைகளைக் குறைத்து, அதில் பணிபுரிகிறவர்களை மற்ற பணிகளுக்குப் பயன்படுத்தி - வெளியே அனுப்பாமல் செய்யலாமே!
 

கரோனா காலத்தின் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் வகையில், எப்படி திருமணங்களுக்கு 20, 30 பேருக்குமேல் கூட வேண்டாம் என்று கட்டுப்படுத்துகிறீர்களோ, அதுபோல், தேவையற்ற அரசு நிகழ்வுகளை நடத்தாமல், குறிப்பிட்ட துறைகள், குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்குரிய Monitoring Cell  என்ற கண்காணிப்புக் குழுக்களை - ஏற்கெனவே உள்ள அதிகாரிகளையே பொறுப்பாளர்களாக்கி செய்யலாம்.
 

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை (குறள் 478).
 

 

 

சார்ந்த செய்திகள்