Skip to main content

தமிழகத்தில் புதிய எண்ணெய் கிணறுகள் வேண்டாம்: அடக்குமுறையை கைவிடுக! ராமதாஸ்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
ramadas report


திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.  அந்த மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து இவர் கூறிய அறிக்கையில்.

தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களை கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் வாயுவை எடுக்கும் பெட்ரோலிய மண்டலமாக மாற்றும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக திருவாரூர் மாவட்டம் குளக்கரையை அடுத்த கடம்பங்குடி  என்ற இடத்தில் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டது. இதற்கான பணிகள் கடந்த 2016&ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களை நடத்தியதால் அப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ஆனால், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த 9&ஆம் தேதி கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக இராட்சத எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் விளைநிலங்களை சீரழிக்கும் வகையில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கடம்பங்குடியில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் எதையும் ஓஎன்ஜிசி பின்பற்றவில்லை. ஓரிடத்தில் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கு முன்பாக அத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும், சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், அத்தகைய அனுமதிகள் எதையும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் மேலாக இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் அதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும்  மக்களின் கருத்துக்களை அறிய கருத்துக் கேட்புக்கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், அத்தகைய கூட்டங்களையும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நடத்தவில்லை. மக்களின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி துடிப்பதால் தான் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பொதுமக்களையும், ஓ.என்.ஜி.சி அதிகாரிகளையும் அழைத்துப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசோ அந்தக் கடமையை செய்யாமல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஏவல் அமைப்பாக மாறி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராடி வரும் மக்களை மிரட்டி வருகிறது.

கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படுவது குறித்து ஓ.என்.ஜி.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த  சிவக்குமார், சுந்தரபாண்டியன், சண்முக சுந்தரம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. அதற்கு அடுத்த நாள் 10&ஆம் தேதி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராகப் போராடிய பேராசிரியர்  ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன்தொடர்ச்சியாக  நேற்று எண்ணெய்க் கிணறுகளை முற்றுகையிட்ட 300 பேரை காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னெடுத்ததற்காக மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மீது காவல்துறை இதுவரை 10 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அத்துடன் அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார், சுந்தரபாண்டியன், சண்முக சுந்தரம், முரளி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை துடித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர்.

காவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாகும். அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை  உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையை ஒழித்து விட்டு எண்ணெய் வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மக்களின் உணர்வுகளை மதிப்பது தான் மக்களாட்சி தத்துவமாகும். அதை மதித்து கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டத்தை நிறுத்தவும், இந்தப்பிரச்சினையில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

''எங்களுக்கு நீட் வேண்டாம்" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தல்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

Neet exam- Government of Tamil Nadu urges Union Health Minister

 

நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

 

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். மதியம் 1.30 மணி வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ''நீட் தேர்வை ஏற்க முடியாது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்'' என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் ''ஏற்கனவே தமிழக அரசு செயல்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறையை நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம்'' எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொருளாதாரத்தில் நலிந்த, முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.