Skip to main content

ஓட்டுக்கேட்டு போன இடத்தில் வேட்பாளரின் அதகளம்!

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

தேர்தல் வந்துவிட்டாலே திருவிழா தான். வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர்களை கவர மக்களின் சேவகன் என்பதை காட்டிக்கொள்ள விதவிதமாக தங்களை வெளிப்படுத்துவார்கள். பெரிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் கூட ரோட்டில் உட்கார்ந்து டீ சாப்பிடுவது, டீ கடையில் அமர்ந்து பொதுமக்களுடன் டீ சாப்பிடுவது, வாக்கிங் போவது, காய்கறி கடையில் குறை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். மாவட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள், யாரென்றே தெரியாதவரின் சாவுக்கு கூட முதல் ஆளாக போய் நிற்பார்கள். வராத கல்யாண பத்திரிக்கையை வந்ததாக எடுத்துக்கொண்டு போய் கனமாக மொய் எழுதுவார்கள். கோயில் திருவிழாவுக்கு வாரி வழங்குவார்கள், நடக்காத விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவார்கள்.

 

அவர்களே அப்படியென்றால் உள்ளாட்சியில் வார்டு தேர்தல் என்றால் எப்படி கலைக்கட்டும்?

 

தினம், தினம் பார்க்கும் மக்களை கவர கவுன்சிலர் வேட்பாளர்கள் விதவிதமாக தங்கள் தெருக்களை சுற்றிச் சுற்றி வந்து வாக்கு கேட்கிறார்கள். அப்படித்தான் வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் ஒருவர் விதவிதமாக வாக்கு கேட்கிறார்.

 

வேலூர் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் காஞ்சனா. உழைக்கும் அடிதட்டு மக்கள் வசிக்கும் பகுதியான மக்கான் அம்பேத்கார் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மீன்கடையில் மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து மீன் கடைக்காரரை ஒதுங்கவைத்துவிட்டு மீன்களை எடைப்போட்டு, விற்பனை செய்து அந்த தொகையை கடைக்காரரிடம் தந்தார்.

 

அதேபோல் டீ கடையில், டீ போட்டு கொடுத்தும், பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி எடுத்துக் கொடுத்தும், அவர் அங்கிருந்த மக்களிடம் மறக்காமல் உதயசூரியனில் வாக்களிங்க, என்னை வெற்றி பெறவையுங்கள். ஜெயிச்சதுக்கப்புறம் அக்காவை பார்க்க முடியுமா என சிலர் முனுமுனுக்க, நீங்க இருக்கற தெருவுலதானே நானும் இருக்கேன், எப்பவும் என் வீட்டு கதவை தட்டலாம் என்றும் உங்கள் வீட்டு பெண்ணாக இருந்து உங்களுக்கு சேவை செய்வேன் என்று டச்சாக பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்