நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்திவரும் ஆளுநரைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை வழக்கம்போல இரு அவைகளும் தொடங்கிய நிலையில், நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது குறித்து விவாதிக்க மக்களவையில் திமுக எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், திமுக எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதேபோல, மாநிலங்களவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் மாநிலங்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.