Skip to main content

விடியலை நோக்கிய பயணத்தில் திருச்சி சிவா! - அருப்புக்கோட்டையில் கருத்துக் கேட்பு!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

 

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்னும் தலைப்பில், விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில், இன்று ஒருநாள் சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா எம்.பி.

 
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட நகர, ஒன்றிய தி.மு.க நிர்வாகிகளுடன் சென்று, பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 


ஜவுளிக்கடை, நகைக்கடை, சாயப்பட்டறை உரிமையாளர்கள், விவசாயிகள், 100 நாள் வேலை பணியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிவதுடன், அவர்களது கோரிக்கைகள், தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தும் வருகிறார். 


நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்களிடம் ஜி.எஸ்.டி.யில் உள்ள நடைமுறை பிரச்சனைகளைக் கேட்டறிந்துவிட்டு, ஆமணக்கு நத்தம் சென்ற திருச்சி சிவா, வயலில் இறங்கி அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான பயிர்களைப் பார்வையிட்டார். அப்படியே, விவசாயிகளிடம் கலந்துரையாடிய அவர், “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பாடுபடும் இயக்கம் திமுக. இந்த, அ.தி.மு.க ஆட்சியில், விவசாயிகள் மட்டுமல்ல.. அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கோ, மக்களைப் பற்றிய கவலை இல்லை. தங்களைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அள்ளிக் கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்காகப் போராடும் சக்தி இருக்கிறது.

 

இங்கே பார்த்த பயிர்களைப் பூச்சி அரித்ததுபோல், சமுதாயமும் அரித்துப்போய் உள்ளது. தற்போதைய வேளாண் சட்டத்தால் விலைநிர்ணயம் செய்ய முடியாது. விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் எதிராக மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு சட்டங்களைக் கொண்டு வருகிறது. அதை எதிர்க்க வக்கில்லாமல், அ.தி.மு.க அரசு இருக்கிறது. கலைஞர், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தார். கண்ணியமாகவும், நிம்மதியாகவும் விவசாயிகள் வாழ்வதற்குத் தேவையானவற்றை, தி.மு.க செய்யும். அதற்கு, நீங்கள் ஆதரவு தந்து திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும்.” என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்