Skip to main content

“மார்தட்டிக் கொள்ளும் திமுக பல்கலைக்கழகத்திற்கு நிதியளிக்கவில்லை” - ஓபிஎஸ் கண்டனம்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

"DMK not funding the university" - OPS condemned

 

சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய உரிய நிதியை ஒதுக்காமல் திமுக அரசு காலம் தாழ்த்துவதாகவும் இதில் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “பிரசித்தி பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாதச் சம்பளத்தைக் கூட தர இயலாத சூழ்நிலை நிலவுவதாகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் மொத்த மாதச் செலவிற்கு 18.61 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 31-05-2023 அன்றைய நிலவரப்படி சென்னை பல்கலைக்கழகத்திடம் 5 கோடி ரூபாய் மட்டுமே இருந்ததாகவும், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு மட்டும் 11.5 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இதனைத் தவிர்க்க பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியிலிருந்தும், அறக்கட்டளை நிதியிலிருந்தும் 7.6 கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

மொத்தத்தில், சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. அரசோ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கூட நிதியை ஒதுக்காமல் காலந்தாழ்த்தி வருவதாக செய்திகள் வருகின்றன. உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்ககம் அரசுக்கு பரிந்துரைத்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான 11.46 கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் பங்கு குறித்து எவ்வித விவரமும் தங்களிடம் இல்லை என்று பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமைதான் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.

 

‘நிதிப் பற்றாக்குறை குறைந்துவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துவிட்டது’ என மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உரிய நேரத்தில் ஒதுக்காமல் காலந்தாழ்த்துவதும், சென்ற ஆண்டிற்கான கூடுதல் நிதியை இன்னும் அளிக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

 

முதலமைச்சர் சென்னை பல்கலைக்கழக விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய நிதியை, மானியத்தை உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்கிடவும், பிற பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியையும் உடனடியாக விடுவித்திடவும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்