நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் சுயேட்சையாக போட்டியிடும் நபர்களும் உள்ளனர். மேலும், எனக்கு கிடைக்காத சீட் அவனுக்கும் கிடைக்கக் கூடாது என்று தலைமையின் கட்டுப்பாட்டை மீறும் காட்சிகளை அனைத்துக் கட்சிகளிலும் நாம் பார்க்க முடியும். அதிமுகவில் கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிடுகின்றனர். திமுகவிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கையெழுத்துடன் முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகிறது. இருப்பினும் திமுகவினர் ஆங்காங்கே சில இடங்களில் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் சுயேட்சையாக போட்டியிடுவது, எதிரணிக்கு வேலை செய்வது போன்ற வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில் 52வது வார்டு திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த பதவிக்கு அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் புஷ்பா (வயது 65) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார் எல்.பெரியநாயகம். திமுகவைச் சேர்ந்த இவர், தான் வாக்குகோரும் நோட்டீஸ்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் பகுதி மக்களுக்காக என்றென்றும் உழைத்திட ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, எல்.பெரியநாயகம் திமுக எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.ராஜாவின் ஆசியோடு களம் இறங்கியுள்ளார். மேலும் எல்.பெரியநாயகத்திற்கான அனைத்து செலவுகளையும் அவர் ஏற்றுள்ளார். அதேபோல் 49 வார்டில் போட்டியிடும் தனது மைத்துனரான காமராஜாவுக்கும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். 49வது வார்டில் உள்ள எதிரணி வேட்பாளர்கள் உள்பட பலரை விலைக்கு வாங்கிவிட்டார். மேயர் பதவி இந்த முறை தலித்திற்கும், அதுவும் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால், துணை மேயர் பதவியில் தனது மைத்துனர் காமராஜை அமர வைக்க முடிவு எடுத்து தீவிர பணியாற்றி வருகிறார்.
திமுக கூட்டணியில், தாம்பரம் நகராட்சியில் தாம்பரத்தில் 51, 52, 54 என 3 வார்டுகளும், பல்லாவரத்தில் 2 வார்டுகளும் வி.சிறுத்தைகள் கட்சி கேட்டது. ஆனால் பல்லாவரத்தில் ஒரு வார்டும், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று கூறிவிட்டது. தாம்பரத்தில் 3 வார்டுகள் கேட்டதற்கு 52வது வார்டை மட்டும் ஒதுக்கினர். இப்போது அந்த வார்டிலும் திமுகவைச் சேர்ந்தவரையே போட்டியாக நிற்க வைத்துள்னர். இதனால் வி.சி.கட்சிக்கு எந்த பொறுப்பும் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது.
இதுகுறித்து திமுக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டது. அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் நேரடியாக வந்து எஸ்.ஆர்.ராஜா உள்பட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இப்போதுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை பாருங்கள். போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கட்சி எதிர்காலத்தில் நல்ல வழிகளை காட்டும் என அறிவுறுத்தி சென்றார்.
இருப்பினும் திமுகவினர் காமராஜா போட்டியிடும் 49வது வார்டு, பெரியநாயகம் போட்டியிடும் 52வது வார்டில் மட்டும் அவர்களுக்காக மட்டுமே வேலை செய்கின்றனர். புஷ்பாவிற்கு ஆதரவு கேட்டு வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வருகிறார், நீங்களும் வாருங்கள் என்று எஸ்.ஆர்.ராஜாவுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. திமுகவினர் செய்யும் இந்த உள்ளடி வேலைகளால் 52வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றிபெற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதேபோல் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் யாக்கூப் திமுக சின்னத்தில் 50வது வார்டில் நிற்கிறார். அவருக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்க திமுக வட்டச் செயலாளர் செல்வகுமாரை இறக்கினார். அது தலைமைக்கு தெரிந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், தொடர்ந்து யாக்கூப் வெற்றிக்கு தடையாக பல்வேறு உள்ளடி வேலைகளை செய்துவருகின்றனர். இதுவும் அங்கு எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளருக்கே சாதகமாக முடியும் நிலை இருக்கிறது என்கின்றனர் திமுக கூட்டணிக் கட்சியினர்.