தமிழகம் முழுவதும் ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (23.12.2020) திருச்சி உறையூர், குளத்தூர் பகுதியில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்துகொண்டு, கிராமசபை கூட்டத்தில் பெண்களிடம் கருத்து கேட்பும் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் உள்ளிட்டவற்றையும் கேட்டறிந்தார்.
இதில், சாலை வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தி.மு.க.வின் பல திட்டங்கள் தற்போது அ.தி.மு.க. அரசில் நிறுத்தப்பட்டுள்ளதால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பெரிய அளவில் குடும்பங்களை பாதிக்க வைத்திருக்கிறது. எனவே, விரைவில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற இந்தக் கூட்டத்தின் நோக்கம் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளது. எனவே, அதனை நாங்கள் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அரசை நிராகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.
மேலும், மினி கிளினிக்குகள் திறக்கப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “தமிழகத்தில் ஏற்கனவே போதுமான அளவிற்கான மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாத நிலையில், தமிழக அரசு எத்தனை மருத்துவர்களும் செவிலியர்களும் தற்போது பணி அமர்த்தி உள்ளது என்பது குறித்து தி.மு.க. தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார், ஒரு அறிக்கையும் கேட்டிருக்கிறார். இந்நிலையில், இது எந்த அளவிற்கு செயல்படும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்” என்றார்.
கமல் உள்ளிட்டவர்கள் எம்.ஜி.ஆர். பெயரையும், அண்ணாவின் பெயரையும் பயன்படுத்துகிறார்களே இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, “கமல் உள்ளிட்டவர்கள் எம்.ஜி.ஆரின் பெயரையும், அண்ணாவின் பெயரையும் மட்டுமே பயன்படுத்த முடியும். அதை விட்டுவிட்டு சாருஹாசன் பெயரையும் சுகாசினி பெயரையுமா பயன்படுத்த முடியும்” என்று பேசினார்.