தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என பிரதான கட்சிகளான திமுக, அதிமுக அறிவித்துள்ளன. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அறிவித்துள்ளது. தங்களுக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கட்சி பிரமுகர்கள் சிலர் தொகுதிகளில் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கட்சியின் மேல்மட்ட தலைவர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று உற்சாகப்படுத்தி வருகின்றனர். வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகர், சேண்பாக்கம் பகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (16.02.2021) நடந்தது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
அப்போது, ''பல தேர்தல்களைப் பார்த்த நான், இரவு பகல் பாராமல் தொகுதியைச் சுற்றி, தேர்தல் பணிகளில் ஈடுபடுவேன். இத்தேர்தல் அப்படி அல்ல. கட்சியின் பொதுச் செயலராக உள்ளதால், தென் மாவட்டங்களில் தேர்தல் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், இந்தத் தொகுதியில் உள்ள அனைவரும் நான் வேலை செய்தது போல வேலை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி வேலை செய்ய வேண்டும்.
பூத் கமிட்டியினர், 100 ஓட்டுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். ஒரு டீ குடித்துவிட்டு, இரவு முழுதும் வேலை செய்பவன், தி.மு.க.காரன் மட்டும்தான். பண பலம், படை பலத்தை ஆளும் கட்சியினர் காட்டலாம். அதைத் தவிடுபொடியாக்கும் வல்லமை, தி.மு.க.,வுக்கு உள்ளது. தி.மு.க. வெற்றிபெறுவதை, எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது'' என்றார் உறுதியாக.