இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை கொடுத்திருந்தது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எம். அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து இந்தக் குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசானைக் கூட்டம் தொடங்கியுள்ளது. அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் மீனவர்கள், தொழிற்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்களது கோரிக்கை மனுக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
முன்னதாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் பொதுமக்கள் தங்களின் பரிந்துரைகளைப் பகிர dmkmanifesto2024@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், 08069556900 என்ற அலைபேசி எண்ணையும், எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு - https://twitter.com/DMKManifesto24, இன்ஸ்டாகிரம் - https://www.instagram.com/dmkmanifesto2024/, முகநூலிற்கு - https://www.facebook.com/DMKManifesto2024 என்ற சமூக இணைய தளப் பக்கத்தின் முகவரியையும் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.