சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சாதிய வன்மத்தை கேள்வி கேட்கும் படம் என, 'அசுரன்' திரைப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அசுரன் படம் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பாரா திமுக தலைவர் ஸ்டாலின் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடத்திய விசாரணையில் தமிழக அரசு, திமுக தலைமை மற்றும் சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்பு, முரசொலி அலுவலக இடம், பஞ்சமி நிலம் என தவறான கருத்தை கூறியதாக, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ்க்கு இதுவரை பாமக நிறுவனர் ராமதாசும், சீனிவாசனும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுக சார்பில் அனுப்பியுள்ள நோட்டீஸ்க்கு இதுவரை எந்த பதிலும், விளக்கமும் பாமக நிறுவனர் ராமதாசும், சீனிவாசனும் அளிக்கவில்லை. அதனால் திமுக சார்பில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்பொழுதும் கூட ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை தாங்கள் கூறிய கருத்து தவறானது என்று இருவரும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அனுமதியோடு இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் இந்த வழக்கை இருவரும் சந்தித்தே தீர வேண்டும் என எச்சரிக்கை விடுவதாக ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.