சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''எச்சரிக்கை செய்தவர்கள் கூட இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கை செய்யவில்லை. மழை வரும், கனத்த மழை வரும், மழை காற்றுடன் மழை வரும், புயல் கற்றோடு மழை வரும் என்றுதான் எச்சரிக்கை சொன்னார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வெள்ளம் வரும், ஒரு நாள் முழுக்க விடாமல் மழை பெய்யும் என்றெல்லாம் கூட எச்சரிக்கை செய்யவில்லை.
இதுவரை 47 வருடத்தில் பார்க்காத ஒரு மழையை நாம் பார்த்தோம். எப்பொழுதுமே திமுகவை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லை என்று சொன்னாலும் சரி மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி. நாம் பலமுறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். பல முறை ஆட்சியில் இல்லாமலும் இருந்திருக்கிறோம். ஆட்சியில் இருந்தபோதும் இப்படிப்பட்ட பேரிடர்களை சந்தித்து இருக்கிறோம். ஆட்சியில் இல்லாத பொழுதும் இது போன்ற பேரிடர்களை சந்தித்து இருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் நேரத்திலாவது நமக்கு இருக்கக்கூடிய அதிகாரம்; அந்த வசதிகள்; மீட்பு செயலில் ஈடுபடக்கூடிய கருவிகள் அவையெல்லாம் சுலபமாக கிடைத்துவிடும். அதை பயன்படுத்தி அந்த பணிகளை நிறைவேற்ற முடியும். ஆனால் ஆட்சியில் இல்லாத நேரத்தில் நாம் சந்தித்த பேரிடர் எப்படி எல்லாம் அந்த களத்தில் இறங்கினோம் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
வேற ஒன்றும் வேண்டாம் கொரோனா என்ற ஒரு கொடிய நோய் வந்தது. அந்த கொடிய நோய் வந்த பொழுது நாம் எப்படி எல்லாம் சீரழிந்தோம்; எவ்வளவு பேரை இழந்தோம்; எப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எல்லாம் ஆட்பட்டோம்; பொருளாதாரம் எந்த அளவிற்கு சீர்குலைந்து போச்சு; வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாது; வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை; தொழிலுக்கு போக முடியவில்லை; வேலைக்கு போக முடிவில்லை; பள்ளிக்கூடத்திற்கு போக முடியவில்லை; கடைக்கு போய் உணவு கூட வாங்குவதற்கான அந்த வசதி கூட இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருந்தது.
அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன செய்யவில்லை என்ன செஞ்சிருக்கணும் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையில்லை இப்பொழுது. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது 'ஒன்றிணைவோம் வா' என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு அந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்ண உணவு; இருக்க இடம்; உடுத்த உடை; மருத்துவ வசதியை தேடி தேடி போய் அவர்களை தொடர்பு கொண்டு நாமாக வசதிகளை செய்து கொடுத்த கட்சிதான் திமுக என்று கம்பீரமாக சொல்லிக் கொள்ள முடியும்'' என்றார்.