அமைச்சர், டி.ஜி.பி. வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர்களது பதவியை முதல்வர் எடப்பாடி பறிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அரசியல்ரீதியாக வலுத்து வருகின்றன.
மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்களோடு முதல்வர் கலந்தாலோசித்தபோது, ""ரெய்டுக்கு ஆளானவர்கள் பதவி விலகுவதுதான் சரியானது. இல்லைன்னா அரசு மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும். எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தமாக பதில் சொல்ல முடியாத நெருக்கடியும் ஏற்படும்'' என தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை மையமாக வைத்து, ராஜினாமா செய்யச்சொல்லி விஜயபாஸ்கரிடம் வலியுறுத்த அவரை தனது வீட்டுக்கு வருமாறு 5-ந்தேதி மாலை அழைத்திருக்கிறார் எடப்பாடி.
அதனை ஏற்க மறுத்து தொலைபேசியிலேயே எடப்பாடியிடம் பேசிய விஜயபாஸ்கர், ""நீங்க என்ன சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, ராஜினாமா செய்யமாட்டேன். ரெய்டு நடந்துட்டாலே நான் குற்றவாளியா? உங்க மகன் வீட்டிலும் சம்பந்தி வீட்டிலும் ரெய்டு நடந்துச்சு. நீங்க ராஜினாமா பண்ணிட்டீங்களா?
ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக வழக்கு இருக்கு. அவர் ராஜினாமா பண்ணிட்டாரா? என்னை மட்டும் ஏன் வற்புறுத்த நினைக்கிறீங்க?'' என காட்டமாகச் சொல்லியிருக்கிறார். இதனால் போனை துண்டித்துக்கொண்டார் எடப்பாடி. நமக்கு எதிரான பிரச்சனையை நாமே எதிர்கொள்ள வேண்டுமென திட்டமிட்டு, "குற்றச்சாட்டு கூறப்பட்டாலே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்'’ என விளக்கமளித்தார் விஜயபாஸ்கர்.