இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று (04.06.2024) வெளியானது. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகள் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் நிலவுகிறது.
இத்தகைய சூழலில்தான் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி - 37 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி - 35 இடங்களையும், காங்கிரஸ் கட்சி - 6 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் தளம் - 2 இடங்களையும், ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) மற்றும் அப்னா தால் (சோனேலால்) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதேசமயம் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 13 தொகுதிகளையும், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 9 தொகுதிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சுயேட்சை ஆகியோர் தலா ஒரு தொகுதிகளையும் கைப்பற்றின. அதே வேளையில் பாஜக 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியால் மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கட்சி பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் மக்களவை தேர்தலின் போது உத்தப்பிரதேச மாநில மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.