நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024) தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரெக் ஓ பிரையன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று வழக்கம் போல் கூடியது. அதில் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாடு அரசு நிதியில் மெட்ரோ திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டது. பிரதமர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சில நல்ல ஆலோசனைகளை பெற்று பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதும் பேசியதாவது, எனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டுமல்ல, எனக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் பாடுபடுவேன், அது எனது கடமை எனப் பேசினார்.
இன்று பிரதமர் தனது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்காக உழைக்காமல், தன்னை ஆதரிக்கும் கட்சிகளுக்காக மட்டுமே பாடுபடுகிறார். தமிழ்நாட்டு மக்கள் மோடி அரசை மன்னிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் பிறக்கவில்லை; அடுத்த ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டுமென்று பிரதமர் மோடி பேசினார். ஆந்திராவைத் தவிர தென்னிந்திய மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம், பீகாருக்கு நிதி தருவதை எதிர்க்கவில்லை. ஆனால், பிற மாநிலங்களை அரசு வஞ்சிக்கக்கூடாது” எனப் பேசினார்.