கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் 2-ஆவது வார்டுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆமா அ.ம.மு.கவைச் சேர்ந்த கவிதா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வார்டில் போட்டியிட்ட த.மா.கா வேட்பாளர் காஞ்சனா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனது வார்டில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரங்களைக் கேட்டுப் பெற்று உள்ளார். அதன்படி அதிக வாக்குகள் பெற்ற தி.மு.க வேட்பாளர் அமுதராணி (1,172) தோல்வி அடைந்ததாகவும், அதைவிடக் குறைவான வாக்குகள் பெற்ற அ.ம.மு.க வேட்பாளர் கவிதா(1066) வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. அப்பகுதியில் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதையடுத்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை நேரில் சந்தித்து, தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக பெறப்பட்ட ஆதாரங்களை மனுவாக தந்து, 'தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் தி.மு.க வேட்பாளர் அமுதராணி வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறும், தவறாக அறிவித்தவர்கள், அதற்குத் துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மனு அளித்தார்.
அவருடன் புவனகிரி தி.மு.க எம்.எல்.ஏ துரை.கி.சரவணன், கடலூர் நகரச் செயலாளர் ராஜா, வழக்கறிஞர் பிரிவு சிவராஜ், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.