கடலூர் மக்களவை தொகுதியில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தி.மு.க கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளராக பண்ருட்டியை சேர்ந்த தொழிலதிபர் டி.ஆர்.வி.ரமேஷ் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். 49 வயதாகும் எம்.பி.ஏ பட்டதாரியான ரமேஷ் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் செல்வசெழிப்புடன் விளங்குகிறார். தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் - ஏற்றுமதியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள இவர், கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும், காயத்ரி, ஸ்ரீநிதி, கண்மணி ஆகிய மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் விருத்தாசலத்தை சேர்ந்த டாக்டர் இரா.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். 68 வயதாகும் இவர் எம்.டி. படித்துவிட்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாக விருத்தாசலத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
பா.ம.க. தொடங்குவதற்கு முன்பிலிருந்தே டாக்டர் இராமதாசுடன் சேர்ந்து சமூக, கட்சி பணியாற்றி வருகிறார். பா.ம.கவின் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவராக உள்ள இவர் 1996 சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2001 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். மீண்டும் 2006 தேர்தலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திடம் தோல்வியடைந்தார். இவரது மனைவி இராமதிலகமும், மகள் இந்துமதி, மகன்கள் மகேந்திரன், அருண் ஆகியோரும் மருத்துவர்களே.
தி.மு.கவும், பா.ம.கவும் கடலூர் தொகுதியில் நேரடியாக மோதுவதால் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது.