Skip to main content

“ரங்கசாமி ஏன் முதல்வராக இருக்க வேண்டும்?” - இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கடும் விமர்சனம்!

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

cpi t raja talk about puducherry cm rangasamy

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் 26,27,28 மூன்று நாள்கள் புதுச்சேரியில் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் அ. ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் கே.சேதுசெல்வம் வரவேற்புரை ஆற்றினார். தேசிய குழு உறுப்பினர் இ.தினேஷ் பொன்னையா தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா சிறப்புரையாற்றினார்.

 

சி.பி.ஐ தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சி பொதுச்செயலாளர் து.ரவிக்குமார், தி.மு.க மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பஞ்சாப் மாநில செயலாளர் பங்த்சிங் ப்ரார், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் வனஜா, தேசிய செயலாளர் பினாய் விஸ்வம் எம்.பி, டாக்டர் நாராயணா அஜிஸ்பாஷா, டாக்டர் காங்கோ நாகேந்திர நாத் ஓஜா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்

 

மூன்று நாள் கருத்தரங்கம் மற்றும் தேசிய மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோருதல், நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும், நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. 

 

இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் பெரிய ஊழல் என்றால் அது அதானி ஊழல். இதனால் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில் நாடு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த ஊழலை விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பா.ஜ.க பிடியில் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காப்பாற்ற வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து பா.ஜ.கவை விரட்டுவதே நமது தலையாய கடமை. இதற்காக மதச்சார்பற்ற கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும். ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்குகளை மக்களிடம் கொண்டு செல்ல ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி மே 15-ம் தேதி வரை மக்கள் இயக்கத்தை தொடங்க உள்ளோம்.

 

காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான் மல்லிகார்ஜூன கார்கே. அவரை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்த பிரதமர் மோடி பார்க்கிறார். அவரது கனவு பலிக்காது. மேலும் டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஒரு அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை. எதிரணியின் தலைவர்களை மிரட்டவும், அச்சுறுத்தவும், அவர்களை பலவீனப்படுத்தவும் பா.ஜ.க சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்துகிறது. 

 

புதுச்சேரி மாநிலம் விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்தோடு இணைந்த காலத்தில் இருந்து தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானங்களை சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலியுறுத்தி எங்கள் கட்சி போராடி வருகிறது. இந்தப் போராட்டம் தொடரும். புதுச்சேரியை ஆளும்  முதலமைச்சர் ரங்கசாமி தனது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன, புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கிறது என்று புலம்ப தொடங்கி இருக்கிறார். அவர் புலம்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும்.

 

பாரதிய ஜனதா கட்சியால் புதுச்சேரி மாநிலமும் மக்களும் இன்றைக்கும் துரோகத்துக்கு ஆளாகிறார்கள். மக்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் ரங்கசாமி முதலமைச்சராக ஏன் இருக்க வேண்டும்? பாரதிய ஜனதா கட்சியோடு ஏன் இன்னும் கைகோர்த்து நிற்க வேண்டும்? அதனை விட்டு வெளியேறுவதற்கு ரங்கசாமி தயார்தானா அல்லது பாரதிய ஜனதா கட்சியின் அடியாளாகவே அவர் இருப்பாரா? ஆளுநர்கள் மாநிலத்திற்கு தேவை இல்லை என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. ஆளுநராக இருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்கள் அரசியல் பேச வேண்டும் என்றால் அவர்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசலாம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்