தமிழ்நாடு சிறப்புக் காவல்படை இன்ஸ்பெக்டரின் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பழனி பட்டாலியன் டி கம்பெனி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் பேசும் ஆடியோவில், டிஜிபி நமக்கு வழிகாட்டுதலை கொடுத்துள்ளார். பழைய பேட்ஜுக்கு தெரிந்திருக்கும். ஆனால், 20வது பேட்ஜுக்கு தெரிய வாய்ப்பில்லை. உங்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற கரோனா அறிகுறி இருந்தால் யாரும் அவசரப்பட்டு கரோனா பரிசோதனை எடுத்துவிடக் கூடாது. தன்னிச்சையாகச் சென்று பரிசோதனை எடுக்கக்கூடாது. நீங்கள் உடனடியாக கம்பெனி அலுவலகத்திற்கோ, ஏ சாப்புக்கோ தகவல் சொல்ல வேண்டும்.
இங்கே இருந்து நாங்கள் என்ன வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறோமோ அதன்படி தான் நீங்கள் செயல்பட வேண்டும். அல்லது, உடனடியாக நீங்கள் புறப்பட்டு கம்பெனி அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம். இரண்டு நாள் தனிமைப்படுத்தி பார்க்கலாம். அப்போதும் சரியில்லை என்றால் கரோனா பரிசோதனை எடுப்பதற்கு ஐஜி அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும்.
ஏற்கனவே 2, 3 பேருக்கு இதுபோல் நடந்துள்ளது. பின்னர் சார்ஜ் மெமோ கொடுத்து பிரச்சனையும் நடந்துள்ளது. இது 20வது பேட்ஜுக்கு தெரிய வாய்ப்பில்லை. 16, 17வது பேட்ஜ் இருந்தால், அவர்கள் 20 பேட்ஜுக்கு எடுத்துச் சொல்லுங்கள். யாரும் தனியாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யக்கூடாது. இவ்வாறு ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறி தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த ஆடியோ பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.