கடந்த 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டிருப்பதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளலாம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து கூடிய பொதுக்குழு கூட்டத்தில், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக இபிஎஸ் தரப்பு அறிவித்தது. இந்த நிலையில், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டிருப்பதாகக் கூறி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு உள்ளது.