அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகுதி நீக்கம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடி - அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பட மாட்டேன். என்னை தகுதி நீக்கம் செய்தாலும், கைது செய்தாலும் உண்மை பேசுவதைத் தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
ராகுல் வழக்கை கவனிக்கும் அமெரிக்கா
நாடாளுமன்ற செயலகம், ராகுல் தனது அரசு பங்களாவை காலி செய்யச் சொல்லி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதற்கு ராகுல் காந்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன் என்று சொல்லி அரசு பங்களாவை காலி செய்வதாக நாடாளுமன்ற செயலருக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று (28ம் தேதி) மாலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் இன்றிரவு (28ம் தேதி) 7 மணியளவில் செங்கோட்டையில் இருந்து டவுன் ஹால் வரை அமைதி பேரணி ஒன்றை நடத்த உள்ளனர். அடுத்த 30 நாட்களுக்கு மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் நாடு முழுவதும் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஜெய் பாரத் சத்யாகிரஹம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என அறிவித்திருந்தார்.
“ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது..? மோடி கண்ணில் பயத்தைப் பார்த்தேன்” - ராகுல் ஆவேசம்
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு காங்கிரஸ் கட்சியினர் டெல்லி செங்கோட்டையில் இருந்து டவுன் ஹால் வரை அமைதி பேரணி நடத்துவதற்காக செங்கோட்டை அருகே திரண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பேரணியை தடுத்த டெல்லி காவல்துறை அவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.