இந்திய எல்லையில் அத்துமீறிய சீன ராணுவம், இந்திய ராணுவத்தின் 20 ராணுவ வீரர்களைக் கொன்று குவித்த நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து அத்துமீறி வருவதைக் கண்டிக்காமல் பிரதமர் மோடி மௌனம் காத்து வருவதாகக் குற்றம்சாட்டி இதனைக் கண்டிக்கும் வகையில் ஜீன் 18 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பேருந்து நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி தொடர் நடைபயணம் மேற்கொண்டு பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா அறிவித்திருந்தார்.
வாணியம்பாடி பேருந்து நிறத்திலிருந்து ஜீன் 18ஆம் தேதி மதியம் நடை பயணத்தைத் துவக்கிய போது அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவரை கைதுசெய்ய முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும் நடைப்பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்க திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்தத் தள்ளு முள்ளில் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா கீழே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அஸ்லம் பாஷா உள்ளிட்ட தொண்டர்கள் 5 பேரை கைது செய்து வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.