ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67.90% வாக்குகள் பதிவானது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் இன்று (08.10.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியானது 31 இடங்களில் பெற்றி பெற்றுள்ளதோடு, 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும் இந்திய தேசிய லோக்தல் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஹரியானா தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதவை. இந்த முடிவு முற்றிலும் ஆச்சரியமானவை மற்றும் உள்ளுணர்வுக்கு எதிராக உள்ளன. இது அடிப்படை யதார்த்தத்திற்கு எதிரானது. இந்த சூழ்நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முதற்கட்டமாக மூன்று மாவட்டங்களில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்குக் கடுமையான புகார்கள் வந்துள்ளன. இது போன்ற பல புகார்கள் இன்னும் உள்ளன. ஹரியானாவில் உள்ள மூத்த நிர்வாகிகளிடம் பேசி, இது தொடர்பாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்போம்.
தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் வேட்பாளர்களால் தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நாங்கள் அதனைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். ஹரியானாவில் இன்று நாம் பார்த்தது சூழ்ச்சிக்கான வெற்றி. மக்களின் விருப்பத்தை சிதைத்ததற்கான வெற்றி. இது வெளிப்படையான ஜனநாயக செயல்முறைகளுக்குக் கிடைத்த தோல்வி. ஹரியானா தேர்தல் முடிவைப் பற்றி என்ன பகுப்பாய்வு செய்ய வேண்டுமோ, அதை நிச்சயம் செய்வோம். ஆனால், முதலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் புகார்களைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். என்ன செய்தோம், என்ன செய்யவில்லை, எங்கே தவறு செய்தோம், இதைப் பற்றிய அலசல் நிச்சயம் இருக்கும். இது தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்படும். இது காங்கிரஸ் கட்சியில் உள்ள வழக்கமான நடைமுறை தான். அனைவரிடமும் இது குறித்துப் பேசி அலசப்படும். ஆனால் இது குறித்து பகுப்பாய்வு செய்யவத்ற்கான நேரம் இது இல்லை. தேர்தல் வெற்றி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. சிஸ்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் இப்போதைக்கு முக்கியமான விஷயம்” எனத் தெரிவித்தார்.