சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான ப.சிதம்பரம், "தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் அகில இந்திய அளவில் முக்கியமான தேர்தல். பா.ஜ.க.வால் காங்கிரஸைப் பயமுறுத்த முடியாது; தேசிய கட்சியின் ஒரே முகம் காங்கிரஸ். தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இருப்பதால் பா.ஜ.க.வை நம்மால் வலுவாக எதிர்க்க முடிகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் காங்கிரஸின் இடத்தைப் பிடித்துவிடும். தென்னாட்டில் காங்கிரஸின் தவறான உத்திகளால் பா.ஜ.க. கைக்கு கர்நாடகா சென்றுவிட்டது. தபால் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
கேரள முதல்வர் மீது தவறான குற்றச்சாட்டைக் கூறி பா.ஜ.க. குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க.விடம் சரணடைந்தால் நல்லவர்கள், எதிர்த்தால் அயோக்கியர்களா? பா.ஜ.க. ஆட்சியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே எதிர்ப்பவர்களுக்கு சிறை எனும் நிலை இருக்கிறது. பா.ஜ.க. வெற்றிபெற்றால் தமிழ் மீது இந்தி, சனாதனம் திணிக்கப்படும். தி.மு.க. கூட்டணியில் இருந்தால் தான், பா.ஜ.க.வை எதிர்க்க முடியும். தமிழகத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. இடையேதான் போட்டி. மூன்றாவது அணியில் எனக்கு நம்பிக்கை இல்லை. அ.தி.மு.க.- தி.மு.க. இடையே மட்டுமே போட்டி என்பதால், இது கமல் உட்பட அனைவருக்கும் பொருந்தக் கூடியதே. காங்கிரஸில் என்னைப் பொறுத்த வரை எளிய தொண்டனாகவே பணியாற்ற விரும்புகிறேன்" என்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், ப.சிதம்பரத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.