விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் பொதுமக்களை சிறைப்படுத்திவிட்டு காவல்துறையினரை குவித்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அது கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் 2006-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் உழவர்களின் பயன்பாட்டில் தான் உள்ளன. அவற்றை என்.எல்.சி நிர்வாகத்திற்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உழவர்களும், பொதுமக்களும் உறுதியாக உள்ளனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத என்.எல்.சி நிறுவனம் இன்று தமிழ்நாடு அரசு உதவியுடன் அந்த நிலங்களை சமன்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணியைத் தொடங்கியுள்ளது.
என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அத்துமீறலுக்கு துணை போகும் வகையில் கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் தலைமையில் 1000-க்கும் கூடுதலான காவலர்களை தமிழ்நாடு அரசு குவித்திருக்கிறது. நிலங்களை சமன்படுத்தும் பணி நடைபெறும் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் யாரும் நுழையாதவாறு தடுக்கப்பட்டுள்ளன. என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்கும் நோக்கத்துடன் பொதுமக்களுக்கு ஆதரவாக களத்திற்கு சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் தான் மக்களுக்கும் உழவர்களுக்கும் எதிரான அடக்குமுறைகளை தலைமையேற்று நடத்துகின்றனர். இதன்மூலம் வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தை அவர்கள் இழைத்துள்ளனர்.
என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு அரசின் அடக்குமுறைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் அஞ்சமாட்டார்கள். என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற்றி உழவர்களைக் காக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். அதன் ஒரு கட்டமாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு உழவர்களின் நிலங்களை சமன்படுத்தி கட்டுப்பாட்டில் எடுக்கும் என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் இந்த அறவழிப் போராட்டம் நடத்தப்படும்.” எனக் கூறியுள்ளார்.