
சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத் தொழிலாளர்களைத் தாக்குவது போன்று செய்திகள் பரவின. அது உண்மையல்ல என காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ள போதும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைகள் எங்கும் பரவிய வண்ணம் இருக்கின்றன.
இயக்குநர் நவீன், இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி இன்னும் சில திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இவர்களது கருத்துகளுக்கு ஒருசேர ஆதரவும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து சீமானும் சாட்டை துரைமுருகனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் சீமானும் சாட்டை துரைமுருகனும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் வகையில் பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.