திருப்பத்தூர் மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ மீது கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதனை கட்சி தலைமை விசாரணை நடத்த பரபரப்பாகியுள்ளது திருப்பத்தூர் மாவட்டம்.
திமுக உள்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது. தற்போது ஒன்றிய செயலாளர் உட்பட ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. திருப்பத்தூர் மாவட்ட ஒன்றிய திமுக தேர்தல் பொறுப்பாளராக செய்தி தொடர்பாளர் அணியின் மாநில இணைச்செயலாளர் சிவ.ஜெயராஜ் நியமிக்கப்பட்டார். ஜுலை 5ஆம் தேதி தேர்தலுக்கான மனு விநியோகிக்கப்பட்டது. கட்சியின் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, ஏற்கனவே பதவியில் உள்ள நிர்வாகிகளை அப்படியே நியமியுங்கள், வயதானவர்கள், கட்சிப்பணி செய்யாதவர்கள், செயல்படாமல் இருப்பவர்களை மட்டும் மாற்றுங்கள் என தலைமை அறிவுறுத்தியது. தலைமை உத்தரவை மீறி சில ஒன்றியத்திலும் சிட்டிங் ஒ.செ எதிராக மற்றொருவர் மனு செய்தனர்.
இதுகுறித்து கட்சியினரிடம் பேசியபோது, ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு மா.செ தேவராஜ் மகன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் முன்னாள் ஒ.செ முனிவேல், ஆலங்காயம் ஒன்றிய சேர்மன் சங்கீதா கணவர் பாரி, சிட்டிங் ஒ.செ தாமோதரன் மனு செய்திருக்காங்க. இதில் சீனியாரிட்டி பார்க்காமல் தன் மகனை ஒ.செ வாக்க முயற்சி செய்றார் தேவராஜ். அதேபோல் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய ஒ.செவாக இருந்தார் ஞானவேலன். உள்ளாட்சி தேர்தலின்போது மேற்கு ஒ.செ ஞானவேலன், கிழக்கு ஒ.செ முனிவேல் இருவரையும் கலந்து ஆலோசிக்காமல் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் தனது மருமகளை சேர்மனாக்க முடிவு செய்தார். இதனை இரு ஒ.செக்களும் எதிர்த்தனர். கட்சி தலைமை அறிவித்த சேர்மன் வேட்பாளரான தேவராஜ் மருமகளை ஆலங்காயம் ஒன்றிய கவுன்சிலர்கள் தோற்கடித்தனர். வேலூர் எம்.பி கதிர்ஆனந்த் ஆதராவளார் பாரி மனைவி சங்கீதா வெற்றி பெற்றார். இந்நிலையில் ஞானவேலன், முனிவேல் என இருவரின் ஒ.செ பதவியை பறிக்கவைத்தார் தேவராஜ்.
இப்போது இருவரும் பதவியை எதிர்பார்க்கிறார்கள். பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு காய்நகர்த்தும் தேவராஜ், ஒரு ஒன்றியத்துக்கு தனது மகனையும், மற்றொரு ஒன்றியத்துக்கு தன் உதவியாளர் அல்லது தனது மனைவியின் தம்பியை செயலாளராக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக ஞானவேலன், கட்சி தலைவருக்கு கடிதம் வாயிலாக புகார் தந்துள்ளனர். புகாரில் அவரது குடும்பத்தில் யார், யாருக்கு பதவி தர முடிவு செய்துள்ளார் என பட்டியல் அனுப்பியுள்ளார் என்றார்கள். இதேபோல் வேறு சில கட்சி நிர்வாகிகளும் தேவராஜ் குறித்து புகார்கள் அறிவாலயத்துக்கு அனுப்பியுள்ளனர். கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதேபோல், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தகுதியே இல்லாத சிலரை ஒ.செ பதவிக்கு மனு செய்யவைத்துள்ளார் தேவராஜ். மேலும், ஒவ்வொரு ஒன்றியம், நகரத்திலும் தற்போது பதவியில் உள்ளவர்களுக்கு எதிராக போட்டி குழுக்களை உருவாக்கியுள்ளார் என்கிறார்கள்.