Skip to main content

வா... வா... ஐ ஆம் வெயிட்டிங்... சீமான் ஆவேச பேச்சு

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

 

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் புதன்கிழமை மாலை நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 
 

அப்போது, நடிகர்களை தலைவர்கள் எனக் கூறும் மோசமான கூட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகத்தை போல் எந்த மாநில மக்களும் திரைத்துறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. நமது அண்டை மாநிலமான கேரளாவில், நடிகர்களுக்கு அந்த மாநில மக்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தலைவர்களை தலைவர்களாக பார்க்கிறார்கள்.

 

Seeman



நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி போன்ற நடிப்பில் திறமை பெற்ற பெரிய நடிகர்கள் கேரளாவில் இருக்கிறார்கள். பெரிய நடிகர்கள் என்பதால் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கவில்லை. கேரளாவில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. இந்த விஷயத்தில் கேரளாவில் இருக்கும் புரிதல் தமிழக மக்களுக்கு இல்லை.


 

நாட்டை காக்கும் ராணுவ வீரர் ஓய்வு பெற்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றுகிறார். ஆனால் மக்கள் பணத்தில் அனைத்து வசதிகளுடன் வாழும் நடிகர்கள் ஓய்வு பெற்றால் நேரடியாக முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். இதில் யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. தமிழக மக்களின் நிலைமையும் வேதனையான ஒன்று. திரைப்படத்தின் மூலம் தலைவனை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


 

நமக்கு சம்மந்தமில்லாத நடிகனை எல்லாம் வா வா என்று அழைக்கும் அவலம் நடக்கிறது. நானும் சொல்கிறேன் வா... வா... ஐ ஆம் வெயிட்டிங்... வரும் தேர்தலில் இலவச கார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளேன். வரும் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் நாட்டை யார் விரைந்து விற்பது என்பது தான். ஆளுங்கட்சி மக்களை ஏமாற்றி வரும் நிலையில் நாங்கள் மக்களை  மாற்ற முயற்சிக்கிறோம். 
 

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் போன்றோர் ரசிகர்களைச் சந்திக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி மக்களைச் சந்திக்கிறது. நடிகர்கள் தாங்கள் வாழவேண்டும் என நினைக்கிறார்கள். மக்கள் வாழ வேண்டும் என நாம் தமிழர் கட்சி நினைக்கிறது. இவ்வாறு கூறினார்.

 

சார்ந்த செய்திகள்