கரூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து அதிமுகவில் இணையும் விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
இந்த கட்சியை கண்ணை இமை காப்பதுபோல ஜெயலலிதா காத்து வந்தார். பல்வேறு கட்சிக்கு சென்று வந்தவர் செந்தில் பாலாஜி. பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்துதான் நிறம் மாறும். ஐந்து கட்சிக்கு போனவர், எந்தக் கட்சியில் இருந்து வந்தாரோ அந்தக் கட்சிக்கே போய்விட்டார். அவர் ஒரு அரசியல் வியாபாரி.
இங்க வந்து வியாபாரத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சென்று வியாபாரத்தை துவங்கினார். அங்கு சரியாக வியாபாரம் நடக்கவில்லை. அதனால் திமுகவுக்கு போய்விட்டார். கொள்கை பிடிப்பு இல்லாத ஒருவர்.
கட்சிக்கு இளைஞர் தேவை என நினைத்த ஜெயலலிதா, செந்தில் பாலாஜிக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு போக்குவரத்துத்துறை அமைச்சர் என மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து கவுரவப்படுத்தினார்.
அதையெல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி அமமுக தொடங்கினர். அதில் செந்தில் பாலாஜி இருந்தார். இறைவன் அங்கேயும் அவரை விட்டுவைக்கவில்லை. இங்கேதான் நாம் கடவுளை எண்ணிப்பார்க்க வேண்டும். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் நடக்கும். அவரது நினைப்பு போலத்தான் அவரது நிலைமையும் இருக்கிறது.
நான் மற்றும் இந்த மேடையில் இருப்பவர்கள் இந்த இயக்கத்தில் 44 ஆண்டுகாலம் உழைத்திருக்கிறோம். உங்களால் எங்களுக்கு விலாசம் கிடைத்திருக்கிறது. உழைப்பும், விசுவாசமும் எங்கிருந்தாலும் அதற்கு ஒரு மரியாதை இருக்கும். செந்தில்பாலாஜி போன்ற அரசியல் வியாபாரிகள், அவ்வப்போது வருவார்கள். வேலை முடிந்துவிட்டால் சென்றுவிடுவார்கள்.
இந்த கட்சியை உடைப்பதற்கும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்கள் நமது சகோதரர்கள், நம்ம இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள், அவர்களிடம் தவறான செய்திகளை சொல்லி இயக்கத்தை பிளவுபடுத்த முற்பட்டவர் இன்று காணாமல் போய்விட்டார். இவ்வாறு பேசினார்.