கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இதய தெய்வம் மாளிகையில் கட்சியின் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில், “பல கட்சிக் கூட்டணிகள், பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள் என மக்களிடம் நாடகமாடி, தேர்தலை சந்தித்த திமுக அணியினர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.
சூழ்ச்சிகள், தந்திரம், சதி செயல்கள் அனைத்தையும் முறியடித்து, அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சூழலில்... சட்டமன்றத் தேர்தலின்போது.. தான் முழுமையாக அரசியலில் இருந்து விலகியிருப்பதாக ஊடகங்கள் மூலம் சசிகலா பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால் தொண்டர்கள் பெரும்படையும், அதிமுகவின் வலுவும், மக்களின் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும், அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக வினோதமான நாடகத்தை சசிகலா அரங்கேற்றிவருகிறார்” என்று பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. சசிகலா தொலைபேசியில் சாதிய உணர்வுகளைத் தூண்டும்விதமாக பேசுவது, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ்ந்துவரும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை இந்தக் கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் தொண்டர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், தங்களை வளப்படுத்திக்கொண்ட ஒரு குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலை விரிக்கின்றனர்.
மக்கள் போற்றும் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் புகழ்பெற்ற இந்தக் கட்சி தனி ஒரு குடும்பத்தின் அபிலாசைகளுக்கு அடி பணியாது. அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்பதை இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்வதோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதத்திலும் செயல் பட்டு, சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய கழகத்தைச் சேர்ந்தவர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதை இந்த மாநகர், மாவட்டம் இருகரம் தட்டி வரவேற்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.