Skip to main content

முதல்வர் சொன்னதன் பின்னணி என்ன? - அழுத்தம் கொடுக்கும் பாஜக!

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

cm stalin dmk and bjp issue

 

தென்மாவட்டங்களில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகர்கோவிலில் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் பேசியபோது, "தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது'' என்று குற்றம் சாட்டியிருந்தார். முதல்வரின் அந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க. ஆட்சி மீது கை வைத்துப் பார்…” என்று கொந்தளித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

நாகர்கோவில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதும் தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் மு.க.ஸ்டாலின். ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து தொடர்ச்சியாக ஸ்டாலின் பேசி வருவது தமிழக அரசியலில் பல்வேறு தரப்பிலும் விவாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசை அவ்வளவு எளிதாகக் கவிழ்க்க முடியாது என்ற சூழல் இருக்கும் நிலையில், ஸ்டாலின் அப்படி பேசியதற்கு ஏதேனும் பின்னணிகள் இருக்கிறதா? என்று ஆராயத் தொடங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

 

இந்த நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பின்னணிகள் இருக்கிறதா என்று திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் நாம் பேசியபோது, “மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலைக்கும் விவகாரத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, மாநில அரசைக் கலைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து பெரும்பான்மையுடன் பாஸானால் மட்டுமே கலைக்க முடியும். அந்தவகையில், அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசுகளைக் கலைப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனால், ஒன்றியத்தில் மோடி அரசு அமைந்த பிறகு, மாநில அரசுகளைக் கவிழ்ப்பதும், ஆட்சியிலுள்ள ஒரு அரசை அகற்றி மற்றொரு ஆட்சியை உருவாக்குவதும் அடிக்கடி நடக்கிறது. இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.

 

சட்டப்பிரிவு 356-யை பயன்படுத்த தற்போதைய மோடி அரசால் முடியாது. காரணம், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பா.ஜ.க. கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை பலம் கிடையாது. அதனால் ஆட்சிக் கலைப்பு என்பதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், சட்டப்பிரிவு 355வது பிரிவைப் பயன்படுத்தி ஒரு மாநில அரசை முடக்க முடியும். அதற்கு வலுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருக்க வேண்டும். தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இல்லை. சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இதனை மோடி அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எந்த ரூபத்திலாவது உருவாக்க நினைக்கிறார்கள். சாதி, மத மோதல்களை ஏற்படுத்தவும் திட்டமிடுகிறார்கள்.

 

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார்கள் என்கிற வதந்தி பரப்பப்பட்டதன் பின்னணியும் அதுதான். இன்றைக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் தமிழர்களுக்கும் மோதலை உருவாக்குவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என மனப்பால் குடிக்கிறது ஒன்றிய அரசு. இதுபோன்ற சதித்திட்டங்களை ஒன்றியத்தில் இருப்பவர்கள் உருவாக்குவதாக முதல்வருக்கு தகவல் கிடைத்திருக்கும். அந்த பின்னணியில்தான், தி.மு.க. அரசை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியிருக்கக் கூடும்” என்று சுட்டிக்காட்டினார். 

 

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியிடம் நாம் பேசியபோது, “தி.மு.க. ஆட்சியின் மீது கை வைத்துப் பார்... தமிழ்நாட்டில் பா.ஜ.க.காரன் யாரும் உயிருடன் இருக்க முடியாது என மக்கள் நினைக்கிறார்கள் என்றுதான் நான் பேசினேன். உயிருடன் இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லை. என் பேச்சை திரித்துப் பரப்பி வருகிறார்கள். பொதுவாக, அமைதிப் பூங்காவாக இருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் வளர்ச்சி தொடங்கி அனைத்து நிலைகளிலும் சிறப்பாக; முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் வெறுப்பரசியலை நடத்தி வருகிறது பா.ஜ.க. தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றலாம் என தினந்தோறும் ஏதேனும் ஒரு வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 

‘இந்தியாவுக்கு வழிகாட்ட ஸ்டாலின் முன்வர வேண்டும்; முயற்சிக்க வேண்டும்' என்றெல்லாம் இந்தியத் தலைவர்கள் பலரும் சொல்லி வருவதை பா.ஜ.க.வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என்கிற வதந்தியையும் பா.ஜ.க.தான் பரப்பியது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. அண்ணாமலை, "ராணுவத்தினரின் கையில் துப்பாக்கி இருக்கு. அதில் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்க சுட்டுத் தள்ளிட்டு வந்துக்கிட்டே இருங்க. மிச்சத்தை பா.ஜ.க. பார்த்துக்கொள்ளும்'' என வன்முறையையும் தீவிரவாதத்தையும் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதேபோல, சாதி, மதப் பிரிவினை அரசியலைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும் முயற்சித்து வருகிறார்கள்.

 

இப்படிப்பட்ட சம்பவங்களால் பதற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே பா.ஜ.க.வின் நயவஞ்சகத் திட்டம். அதன் மூலம் தி.மு.க. அரசை முடக்க அவர்கள் சதி செய்வதாகவே தெரிகிறது. அதன் பின்னணிகளை அறிந்ததால்தான் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க. அரசை அகற்ற சதி நடக்கிறது எனச் சொன்னார்” என்று விவரித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்