அதிமுகவின் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 17 ஆம் தேதி (17.10.2023) காலை 10.30 மணிக்கு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 82 பேர் பூத் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.