சென்னை கலைவானர் அரங்கில் நாடாளுமன்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா எழுதிய “முரசொலியின் மடியில் தவழ்ந்தவை”, “மேடையெனும் வசீகரம்”, “கேளுங்கள் சொல்கிறேன்”, “எதிர்பாராத திருப்பம்”, “காட்சியும் கருத்தும்” ஆகிய 5 நூல்கள் வெளியிட்டு விழா இன்று (05.10.2024) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். அதனை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நடிகர் பிரகாஷ் ராஜும், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திருச்சி சிவா நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, 526 விவாதங்களில் பங்கேற்று 790 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதனால்தான் ஆளும் தரப்பு, 'சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது' என்று அச்சம் கொள்கிறது. அது மட்டுமில்லை. தொழில் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக ஏழு அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார். ஒன்பது தனி நபர் மசோதாக்களையும், இரண்டு தனி நபர் தீர்மானங்களையும் கொண்டு வந்திருக்கிறார்.
அவருடைய சாதனைகளுக்கு மகுடம் வைப்பதுதான் ‘திருநங்கைகள் உரிமைகள் மசோதா - 2014’. 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனி நபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனை. இன்றைக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் இது ஒரு கேள்வியாகக் கேட்கப்படுகிறது. அதேபோல, இன்னொரு பெரிய சாதனை இன்றைக்குச் சேவைத் துறைகளில் பணிபுரியும் சுமார் 80 லட்சம் பணியாளர்களின் நிலை பற்றியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்குப் பேசி, அதன் விளைவாக மத்திய அரசு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை வகுக்க முன் வந்திருக்கிறது. இதெல்லாம் சிவாவின் பெருமைகள் மட்டுமல்ல. சிவா மூலமாகத் தி.மு.க. அடையும் பெருமைகள்” எனத் தெரிவித்தார்.