பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.
இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேதப் பரிசோதனையானது முடிந்த உடன் உடலானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னணி பாடகி சித்ரா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிறந்து 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களைப் பாடி சரித்திர சாதனையைப் படைத்துள்ளார். அண்மையில் தான் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் பத்மபூஷன் விருது வாங்குவதற்கு முன்பே எதிர்பாராத விதமாக அவர் மறைந்துள்ளார்” எனக் கூறினார்.