அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார்.
அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீர் கடந்த 28 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 'இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகத்தை ஆதாரத்துடன் எடுத்து வைத்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருக்கிறேன்' எனக் கூறியிருந்தார்.
அதனையடுத்து அன்று பிற்பகலே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜெ.எம்.பஷீரை சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஜெ.எம்.பஷீர் சந்தித்துப் பேசியுள்ளார். ராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் நினைவு ஜெயந்தி விழாவில் பங்கேற்க ஓபிஎஸ் வந்த நிலையில், அங்கு வந்த ஜெ.எம்.பஷீர், ஓபிஎஸ் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கு முன் கூட்டத்தில் நடந்து வந்த ஓபிஎஸ்-ன் காலில் விழுந்து ஜெ.எம்.பஷீர் வணங்கியது அங்கே லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.