அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, சிசோடியாவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக தனது தியானம் குறித்து பேசிய அவர், “மக்களுக்கு தரமான கல்வியையும் மருத்துவத்தையும் கொடுக்க நினைத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பிரதமரின் செயல் கவலை அளிக்கிறது” என்றார். மேலும், நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், அதனால் நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று தியானம் இருக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நாளை (16/04/2023) அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆகிறார்.