முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடெங்கும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அதேபோல் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் பசுமலை ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆடியோ விவகாரத்தை அமைச்சரவை மாற்றத்தினால் அந்த செய்தியை மறைத்து விடலாம் என முதலமைச்சர் முயற்சி எடுத்துள்ளார். அமைச்சரவை மாற்றம் மட்டும் போதாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். அதுவரை எத்தனை அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த திமுக அரசு ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத அரசாக இருக்கும் காரணத்தால் அமைச்சரவை மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆட்சி மாற்றத்தைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு என்பது சந்தர்ப்பவாத சந்திப்பு. எந்த விதமான தாக்கமும் ஏற்படப்போவது இல்லை. எத்தனை பூஜ்ஜியங்கள் சேர்ந்தாலும் அது பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ராஜ்ஜியத்திற்கான எந்த வழியும் ஏற்படப் போவதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தை தான் நாங்களும் வழிமொழிகிறோம். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். பலமுறை சென்று முறையிட்டும் தோல்வி அடைந்தார்கள். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சென்றார்கள்.
வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியை சண்டிக்குதிரை என சொல்லியுள்ளார். அரசியல் நாகரீகத்தோடு பேசுவதற்கும் அரசியல் நாகரீகத்தோடு பிரச்சனைகளை கையாள்வதற்கும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எங்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள். வார்த்தைகளை கையாள்வதிலும் பேசுவதிலும் அரசியல் நாகரீகம் இருந்தால் மக்கள் முகம் சுழிக்கமாட்டார்கள். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் முகம் சுழிக்கமாட்டார்கள்” எனக் கூறினார்.