2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குத் தமிழகத்திலிருந்து மீண்டும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம். பாசிஸ்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடி எடுத்து வைக்க முடியவில்லையோ அதுபோல சிஏஏ சட்டமும் தமிழகத்திற்குள் நுழைய முடியாது. மத அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சிஏஏ மசோதாவை மக்கள் கிழித்து எறிந்தனர். சிஏஏ சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் பாசிஸ்டுகளை இம்முறை மக்கள் தூக்கி எறிவார்கள். அடிமைகளின் உதவிகளோடு கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சிஏஏ சட்டத்தை அமலாக விடமாட்டோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.